Monday, May 26, 2008
அந்த அன்னையின் அழகுக்கு, அன்புக்கு, அருளுக்கு ஈடேது ?
புதுப்புது வலைப்பதிவுகளைப் படிக்கையிலே ஒரு உற்சாகம் தோன்றுகிறது.
அண்மையில் நான் படித்த நானோ சயின்ஸ் என்னும் பதிவு ஆழ்ந்த கருத்துக்களைக்
கொண்டதாக அமைந்திருக்கிறது. நம்மில் பலரை கலை உணர்வு அதிகம் உள்ளவரென்றும் பலரை தர்க்கரீதி ( logic ) யானவர் எனவும் கண்டிருக்கிறோம். மூளையில் ( எங்கே இருக்குன்னு கேட்பீர்களோ ! ) வலது பக்கம் புதுப்புது படைப்புகளைக் கற்பனைத்திறன் கொண்டு ஆக்குவதிலும் இடது பக்கம் எந்த ஒரு பொருளையும் தர்க்கரீதியாக அணுகுவதிலும் செயல் படுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். எவருமே இடது பக்கம் ஒன்றே அல்லது வலது பக்கம் ஒன்றே என ஒரு பக்க மூளை செயல்பாடு உடையவர் இல்லை. நம்மில் ஒரு 90 விழுக்காடு இரண்டும் கலந்தவர் எனினும் எந்த பக்க மூளைதனை அதிகம் செயல் படுத்துகிறோம் என்பதை சில பரீட்சைகள் மூலம் தெரிந்து கொள்ள இயலும். நாட்டியம், பாட்டு, ஓவியம் பொதுவாக கலைகள் உணர்வு மிக்கவர் தமது வலது பக்கத்தினை அதிகம் செலவு செய்கிறார்கள் எனினும் ஒரு பரத நாட்டிய நிகழ்வினையோ, ஒரு கர்னாடக சங்கீத இசை நிகழ்ச்சிதனையோ தர்க்க ரீதியாக இலக்கண ரீதியாக ( critic ) அணுகுபவர் இடது பக்க மூளை அதிகம் பயன் படுத்து கின்றனர். நாம் யார் எப்படி என நமக்கே உணர்த்தும் இவரது அறிவு பூர்வமான வலைப்பதிவுகள் வலை உலகத்திற்கு ஒரு வரப்பிரசாதம்.
இந்த வாரம் இப்பகுதியில் " ஓம் எனும் பிரணவத்தில் துவங்கும் காயத்ரி மந்திர மந்திரம் " ஒரு அண்டத்தில் நிகழும் ஒலி அதிர்வுகளைப் பற்றி (நமக்குத் தெரிந்ததும் இருக்கிறது , தெரிந்ததாக நினைப்பதும் ) விலா வாரியாக எடுத்துச்சொல்லி கேள்வி மேல் கேள்வியாக கேட்கிறார்கள்.
http://nonoscience.wordpress.com/2006/04/30/critique-on-gayatri-mantra-a-scientific-view-by-dr-tanmaya/#comment-5784
பிஸிக்ஸ் படித்த ஆன்மீக வாதிகள்
சண்டை போன சரியான இடம். சபாஷ் ! சரியான போட்டி !!
தமது படைப்புகளால் தம்மைச் சுற்றி இருப்போரைக் கவர்வதும் ஒரு கலை தான். சாதாரண ஒரு விஷயத்தைக் கூட சுவையுடன் சொல்வதில் அதே சமயம் அரிய தகவல்களையும் அளித்து தனது வலைதனை ஒரு அறிவுக்கூடம் மட்டுமல்ல, ஒரு ஆய்வுக்கூடமாகவும் ஆக்குகிறார் ந்யூ சீ பதிவாளர்.
தவிடு முதல் தங்கம் வரை இவர் எழுதும் பொருள்கள் ( subjects ) கணக்கிலடங்கா. ஒரு நாள் சூரியன் உதிக்க மறந்தாலும் இருக்கலாம். ஆனால் இவர் பதிவு எழுதா நாள் இல்லையெனச் சொல்லும் அளவிற்கு அளவு கடந்த உற்சாகத்துடன் செயல்படுவதில் இன்றைய இளைஞர் சமுதாயத்திற்கு ஒரு வழிகாட்டி. தொய்வு, சோர்வு என்பதே இவர் அகராதியில் இல்லை போலும். நானும் அவரை அவ்வப்போது ஒரு குண்டூசியால் குத்திப்பார்ப்பேன். ஏற்ற வகையில் பதிலளிப்பார். இவரிடம் அதிகம் நான் காணுவது receptivity as well as balanced approach. "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்பார் வள்ளுவர். உலகெல்லாம் அறிவு பரந்து கிடக்கிறது. அதை உள்வாங்கிக்கொள்ள ஒரு அகந்தை இல்லாத மன நிலை வேண்டும். அப்படிப்பட்டவர் தான் இதுபோன்ற புதியவனவற்றை ஆக்க இயலும் இவர் யார் என உங்களுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அப்படியும் தெரியாமல் போனால், பக்கத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்றால் இவரைப் பார்க்கலாம். பரந்தாமனின் மேனியெல்லாம் மாலையாக மணம் வீசுவார். இந்தப் பெருமாள் கோவிலிலே வருடம் முழுவதும் வைகுண்ட ஏகாதசிதான்.
காதோடு ஒரு விஷயம்.
உத்சவத் திரு நாட்களில் கூட்டத்தோடு கூட்டமாக நாமும் காத்திருப்போம்.
அர்ச்சகர் எல்லோருக்கும் தீர்த்தம் கொடுத்து, சடாரி சாத்தி, துளசி தருவார்.
ஒன்றிரண்டு முறை நம் நீட்டிய கைகளைத் தாண்டிச் சென்று விடுவார்.
பக்தர்கள் சோர்வதில்லை. அவர் பிரசாதம் தரும்வரை அங்கிருந்து நகர்வதில்லை.
வலை உலகில் கவிதை எழுதும் கலைஞர் பலர். அவர் சிலரின் கவிதைகள் முதன் முறை படிக்கும்போதே மிகவும் கவர்ந்து விடுகின்றன. சொல் நயம், பொருள் நயம். சொற்கோர்வை, சந்தம், எதுகை, மோனை, உபமானம், உபமேயம், ஆகியவையும் இன்ன பிறவற்றையும் கவிதைக்கு இலக்கணம் கூறுவோர் பகர்வினும் இவையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டபின் கவி பாடுவதில்லை கவிஞர்கள். கவிஞர் தம் வாய் திறந்தாலே மடை போல் பெருக்கெடுத்து ஓடும் பெருவெள்ளத்தில் சந்தமும் எதுகையும் அனந்தம். பாரதி முதல் கண்ணதாசன் வழியே வாலி வந்து இன்றைய யுக பாரதி வரை பாடிய கவிதைகள் அனைத்தும் அவர்தம் உள்ளத்திலிருந்து பெருகிய கங்கைப்பிரவாகம். இலக்கணம் இவர்களுக்கு கைகட்டி நிற்கும். இன்னிசையும் தன்னை மறந்து தாளம் போடும்.
http://kavinaya.blogspot.com/
அவ்வப்போது இதுபோன்ற கவிதைகள் என் கண்ணில் படும். உடனே ஒரு வேகத்துடன் ஆர்வத்துடன் அதற்கு ஒரு மெட்டு போடவேண்டும் என எண்ணுவேன். எனக்குத் தெரிந்த இசை ஞானத்தின் துணையுடன் அக்கவிதைகளைப் பாடிடும்போது நான் காணும் மன நிறைவு சொல்லில் அமையாது. " ஸ்வாந்தஸ் ஸுகாய " என்று சொல்வார்கள், துளசி எதற்கு ராமாயணம் எழுதினார் என்று. ஏதோ லட்சாதி லட்சம் நேயர் படிப்பார்கள் என்றா ? தன் மன நிறைவுக்காக எழுதினார் என்று சொல்வார்கள்.
அது போலத்தான். அன்று நடந்தது. கவி ஒருவர் நயத்துடன் புனைந்த கவிதையை நானும் என் மனைவியும் யதுகுல காம்போதி எனும் ராகத்தில் மெட்டமைத்து பாடினோம். யூ ட்யூபிலும் அரங்கேற்றினோம். எங்கேயோ இருக்கும் என் தங்கை ( அவள் ஒரு க்ளாசிகல் இசை வித்தகர் ) எனக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். பாடலைத் தானும் ஒரு முறை பாடிக் காண்பித்துப் பெருமிதம் கொண்டார். அப்படியே " உன் வாயைத்திற " என்றார். எதற்கு என்றேன். அம்பிகையின் அழகைப் பற்றிச் சொன்ன வாய் இனிக்க வேண்டாவோ ? இந்தா ஒரு கல்கண்டு என்றார். தொடர்ந்தார்: " அம்பிகையின் அழகை வர்ணிப்பதற்கும் அன்னையின் அருள் வேண்டும்.
http://www.youtube.com/watch?v=-Kg9mQxLpd4pd4
ஆதிசங்கரர் தனது ஸெளந்தர்ய லஹரியில் 100 பாக்கள் அந்த அம்பிகைதனை பாதார கேசம் வர்ணித்து அவளது அருள் வெள்ளத்தினைத் தனது கவிதைகளினூடே பொழிகிறார். 100 பாடல்கள் எழுதியபின்னே அந்த அன்னைக்கு அம்பிகைக்கு, இத்துணை ஆற்றல் எனக்களித்தனையே ! கவி பாடும் திறனை அளித்தாயே ! உனக்கு நைவேத்தியமாக என்ன தருவேன் என்ற கேட்டு அதற்கான விடைதனையும் நூறாவது பாடலிலே முடிவாகத் தருகிறார்.
எந்த உன் அருளால் இத்தனை பாடல்களையும் யான் இயற்ற இயன்றதோ, அந்த ஆற்றலையே உன் பாதங்களிலே சமர்ப்பிக்கிறேன், நைவேத்தியமாக. பெற்று எனக்கருள்வாய் என்கிறார் சங்கரர்.
யார் நம்மைப் பாடலமைக்குமாறு, பாடுமாறு ஊக்குவிக்கிறாரோ, அவர் அன்னையே.
யார் பாடலைப்பாடுகிறாரோ அவரும் அன்னையே.
எது பாடலோ, எது இசையோ அவரும் அன்னையே.
அந்த அன்னையின்
அழகுக்கு, அன்புக்கு, அருளுக்கு
ஈடேது ?
Subscribe to:
Post Comments (Atom)
சொன்னா நம்பமாட்டீங்க......
ReplyDeleteதினமும் காலையில் ஸ்வாமி விளக்கேத்திட்டு, கொஞ்சநேரம் தியானம் பண்ணறேன் பேர்வழின்னு இருப்பேன். அப்புறம் எதாவது ஸ்வாமி சம்பந்தப்பட்டப் புத்தகங்களில் ஒரு அத்தியாயம் படிக்கும் வழக்கம் இருக்கு.
ராமாயணம், மகாபாரதம்,( இது ரெண்டும் ராஜாஜி) பக்திவயல் (பெளராணிகர்) சுந்தரகாண்டம் (வால்மீகி) இப்படித் தொடர்ந்து ஒரு புத்தகம் முடிச்சுட்டு அடுத்த்துன்னு போகும். இந்த வரிசைகளில் தெய்வத்தின் குரல்
ஆறாம் பாகம் இப்பப் படிக்கிறேன்.
தங்கம் பதிவு போட்ட மறுநாள், தங்கத்தைப் பத்தித்தான் பெரியவர் சொல்றார். தாலிச்செயின் போட்டுக்காம மஞ்சள் நூலில் தாலியைப் போட்டுக்கறதுதான் உசிதம் என்கிறார். அப்புறம்.... நவரத்ன க்ரீடம், தங்க ஒட்டியானம் எல்லாம்
அதிகப்படி. எல்லாருக்கும் கம்பல்ஸரி இல்லை (பக்கம் 1246)
அம்பாளின் மதுர கண்டத்தில் இருக்கும் மூணு கண்ட ரேகையையும், சிவன் கழுத்தில் இருக்கும் நீல கண்டத்தையும் விளக்கும் பகுதி.
இங்கே உங்க பதிவுக்கு வந்தால் அதே செளந்தர்ய லஹரி!!!!
ஐயா, என் வலைப்பூவைப் பற்றிக் குறிப்பிட்டமைக்கு மிகுந்த நன்றிகள்!
ReplyDelete//எந்த உன் அருளால் இத்தனை பாடல்களையும் யான் இயற்ற இயன்றதோ, அந்த ஆற்றலையே உன் பாதங்களிலே சமர்ப்பிக்கிறேன், நைவேத்தியமாக. பெற்று எனக்கருள்வாய் என்கிறார் சங்கரர்.//
ஆம் ஐயா. நானும் அவ்வாறே சமர்ப்பிக்கிறேன். இயக்குபவளும் அவளே; இயங்குபவளும் அவளே. அவளன்றி ஓரணுவும் அசையாதன்றோ! அன்புக்கு மிகுந்த நன்றிகள்!