Pages

Tuesday, September 11, 2012

தேகம் அநித்தியம் மரணம் நிச்சயம்

நான் ஒரு ஆறு அல்லது  ஏழு வயசு பையனாக இருக்கும்போது என் அப்பா ஒரு சலூனுக்கு கூட்டிக்கொண்டு போவார் . அங்கே சுவற்றில்  ஒரு பலகை நான் முடி வெட்டிக்கொள்ளும் கடையில் மாட்டி இருக்கும் .

 தேகம் அநித்தியம் மரணம் நிச்சயம் சிவனை மறவாதிரு மனமேஇது என்னப்பா அர்த்தம் என்றேன்

உடம்பு ஒரு நாள் போயிடும்டா , சாமி தாண்டா இருப்பாரு எப்பவுமே அப்படின்னு   போட்டிருக்கு

 எதுக்கு அப்பா இந்த கடையிலே இந்த போர்டு ? என்றேன்.

தம்பி பேசாம இரு, தலைய ஆட்டாதே என்றார்  முடி திருத்துபவர்

 கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தேன் ஆனால் மனசு மட்டும் ஓடிக்கொண்டே இருந்தது

இந்த தலை முடி மட்டும் அநித்திய மாகத்தான் தெரிந்தது.

வளரும் கொஞ்சம். காட்டன் மாதிரி இருக்குடா அப்படின்னு அப்பா பீல் பண்ணும்போது    வெட்டப்படும் .

ஒரு நாள் கேட்டேன் "ஏம்பா எனக்கு  மட்டும வெட்டறே  ? தங்கச்சிக்கு மட்டும் அத்தனை முடி இருக்கே ?

ஒரு முறை முறைத்தார் அப்பா.
பையா பொம்பளை புள்ளைங்களுக்கு முடி  வெட்ட கூடாதுதம்பி  . என்றார் முடி திருத்துபவர் .நீ நல்ல பையனில்லே நல்ல சமத்த உட்கார்ந்துக்க என்றார். சமததானேன்.

இந்த அநித்தியம் சமாசாரம் மட்டும் மனதிலே வந்து போயி என்னை த்வம்சம் பண்ணி
கொண்டு இருந்தது.

தெருவிலே மாசத்துக்கு ஒரு தரமோ அல்லது இரண்டு மாசத்துக்கு ஒரு தரமோ யார் யாரோ  இறந்து அவர்கள் உடல் தூக்கிச் செல்லப்படும் போது கூட நான் மனுஷன் அநித்தியம் என்றால் மனிதனாகப் பிறந்தவன் இறக்கவேண்டும் என்று தான் பொருள். மனித இனம் அநித்தியம் அல்ல என்று தான் நினைத்தேன். In other words mankind will last for ever.

ரொம்ப வருஷம் ஆனப்பிரம் கூட, பட்டினத்தார் படிக்கும்போது    கூட , ஒரு தனி மனுஷன் இறந்து  போவானே தவிர மனுஷன் இருந்து கொண்டே தான் இருப்பான் . அதுவும் இந்த மாதிரியே தான் இருப்பான் எனவும் நினைத்தேன்.  கூடு விட்டு கூடு பாயும் என்று வேறு அந்த சித்தர்கள் பாடலில் போட்டு இருந்ததால், ஒரு வேளை இந்த உடலை விட்டு விட்டு, இன்னும் ஒரு உடலுக்கு அடுத்த ஜன்மத்தில் தாவி விடுவோம் என்று நினைத்தேன்.

புல்லாகி, புழுவாய், பல் விருகமாகி, பறவையாய் பாம்பாய், எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்  என்று திருவாசகம் படிக்கும்போது மனிதனுக்கும் இந்த நிலை ஒரு கடைசி நிலை இல்லை இதற்கும் அப்பாற்பட்ட ஒரு இன்றைய மனிதனை விட அதீத சக்தி வாய்ந்த ஒரு மனிதன் பரிணாம வளர்ச்சியில் தோன்ற ஒரு வாய்ப்பு இருப்பதாகவே பட்டது.


எங்க சயின்ஸ் வாத்தியார்.  ஹைலி இண்டேலிஜென்ட் ,ஒரு நாளைக்கு அவர் டார்வின் தியரி நடத்தும் பொது, கரப்பான் பூச்சி ஒன்னு தான் இந்த பரிணாம வளர்ச்சிலே முழுமை அடைஞ்சிருக்கு என்றார். அப்படின்னா மனிசன் ஆவல்லையா சார் என்றேன்
தெரியல்லே என்றார் ஆசிரியர் .  உண்மையே பேசி பழக்கப்பட்டவர்.


பின்னாடி ரொம்ப வருஷத்திற்குப்  பிறகு வேதக் கிளாஸ் எல்லாம் படிக்கும்போது கூட, கருத யுகம் த்வாபர யுகம், த்ரேதா யுகம் தாண்டி இப்ப கலி யுகம் நடந்துகொண்டு  இருக்கிறது அது முடிவதற்கு இன்னமும் நாலு லட்சத்தி முப்பத்தி எட்டு ஆயிரம் வருடம் இருக்கிறது என்று கணக்கு சொன்னார்கள். இதை ரிஷிகள் கணக்கிட்டார்கள். என்று சொல்கிறார்கள். இந்த 4,38,000 வருஷம் ஒரு ஐம்பது வருசத்துக்கு முன்னாடியும் அதே தான் சொன்னார்கள். இப்பவும் அதே தான் சொல்கிறார்கள். கொஞ்சம் குறையாதோ. ?  தெரியவில்லை.

இன்னிக்கு அமெரிக்க பத்திரிக்கை சி.என்.என். லே படிக்கிறேன். சில பட்சி, மீன், மிருக இனங்கள் முற்றிலுமே அழிந்து போகக் கூடிய நிலை வந்திருக்கிறது .  அதை இங்கே படியுங்கள்.  அந்த காலத்து டினோ சார் காண வில்லை. ஒரு நாள் புலி இல்லாம போய் விடும் என்கிறார்கள்.  இந்த இருபது உயிரனங்கள் இன்னும் கொஞ்ச காலத்துக்குப் பிறகு காணாமல் போய்விடும் அதை தக்க வைப்பதற்கு நாம் செய்யவேண்டியது என்ன என்று இங்கு சொல்கிறார்கள்.

(Please cut and paste the URL if U R not taken by clicking above link)
 http://edition.cnn.com/2012/09/11/world/eco-100-endangered-species/index.html?hpt=hp_c3

ஒரு வேளை பரிணாம வளர்ச்சி யில் எதெல்லாம் முழுமை பெற்றுவிட்டனவோ, இனி அதற்கு மேல் ஒரு நிலை இல்லை என்று இருந்தால் அது அழியக் கூடுமோ என்று நினைத்தேன்.

அப்படி என்றால், மனிதனுக்கு இன்றைய பௌதிக நிலை தான் கடைசியா? அவன் முழு வளர்ச்சி பெற்றிவிட்டானா என்ற கேள்வியும் உடன் எழுந்தது.

அப்பத்தான் நம்ம வலைபதிவர் கீதா சாம்பசிவம் அவர்கள் ஒரு குண்டை தூக்கி போட்டு இருக்கிறார்கள்.

வருகிற டிசம்பர் இருபத்திரண்டாம் தேதி உலகமே அழிஞ்சு போயிடுமாம்.
திருமதி கீதா அவர்களின் வலையையும் அவர்கள் கவலையையும்  பொறுமையுடன் படிக்கவும். 
இதற்கு ப்ரூப் வேறே நிறைய கொடுத்து அதை படிக்க சொல்றாக.   கேட்பதற்கே பயமாக இருக்கிறது. படிக்கவும் வேணுமா ?  கீதா அம்மா ! நீங்க பெரியவங்க ... சொன்னா சரியாத்தான் இருக்கும்.

உலகம் அழியப்போறதா ?

அப்படி என்றால், அடுத்த தமிழ் பதிவர் மா நாடு கிடையாதா ?

அடுத்த மார்ச் மாதம் வருகிறேன் என்று என் அமெரிக்கா பெண்ணிடம் வாக்கு கொடுத்திருக்கேன். அது பொய்யாகப் போய் விடுமோ ?
பிச்சைக்கும் தினேஷுக்கும் நாராயணன் இவாளுக்கெல்லாம்  பூணூல் வைபவமாவது பார்க்கவேண்டாமா ?
அதுக்கு இருந்துட்டு
 சஞ்சு அச்சயா கல்யாணம் பாக்காம போனா எப்படி ? நன்னா இருக்குமா ?
நலங்கிட ரா ரா ராஜ கோபால அப்படின்னு வூட்டு கிழவி பாடுவாளே அப்ப ! அதைக் கேட்கவேண்டாமா ?

கவலையாக இருக்கிறது. கொஞ்சம் நடுக்கமாகவும் இருக்கிறது.
தஞ்சாவூர் பழைய வீடு. கொஞ்சம் மராமத்து வேலை பாக்கணும். நல்ல காண்ட்ராக்டர் ஒருவரைப் பார்த்து வை என்று நண்பரிடம் சொல்லி இருந்தேன் . இப்ப வேண்டாம். டிசெம்பர்க்கு அப்பறம் பார்த்துப்போம் என்று புத்தி கூறியது.
காடரகட்  ஆபரேஷன் கூட இப்ப வேண்டாம். டிசம்பர் குள்ளே பார்வை மங்கிடாது.

நடுவில் ஒரு அற்ப ஆசை இந்த கிழவனுக்கு.

" ஏ கிழவி !! சீக்கிரம் அந்த பொன்னாடைய கொண்டு வா. இன்னொரு தரம் பொத்திக்கொண்டு ஒரு போடோ எடுத்துக்கறேன் " என்று கத்தினேன்.

" என்ன அப்படி ஒரு சத்தம் !! என்ன ஆயிடுத்து அப்படின்னு இப்படி கத்தரிக ?" என்றாள் என் சகதர்மிணி

இதோ பாரு, கீதா அம்மா அன்னிக்கு நம்ம அமெரிக்க பத்திரிகைலே படிச்சதே ப்ரூபோட
எழுதியிருக்காங்க   உலகம் டிசம்பர் 12 ம தேதி காலியாம்.

எந்த வருஷம் போட்டிருக்கா ?

அத படிக்கலையே ....

நல்லா  படிங்க...    வருஷம் 12012. மாசம் 12 தேதி 12. வருசத்திலே   முதல் ஒன்னு அழிஞ்சு போயிடுத்து.   யாருமே கவனிக்கலை.

அப்படியா.. ஆமாம். அதுதான் ரைமா வருது.  12 - 12 - 12 0 12  
அது சரி.
என்ன இருந்தாலும்,

தேகம் அநித்தியம் மரணம் நிச்சயம்.
சிவனை மறவாதிரு மனமே
என்றேன்
  

1 comment:

  1. ரசித்தேன், சுவைத்தேன். இதுபோன்று நிறையவே வேண்டும்!

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!