Pages

Friday, November 8, 2013

சூர சம்ஹாரம்.இன்று சூர சம்ஹாரம்.

 சூர சம்ஹார நேரடி தொலைக்காட்சியை ரசித்து பார்த்து தாரகாசுரன் யானை முகம் சிம்ம முகத்தோடு வந்த அந்த அசுரனின் சோதரர்களை தன் வேலினால் வதம் செய்து பின் தன் முன்னே யுத்தம் செய்ய வந்த தாரகாசுரனையும் கொல்லாது ஆட்கொண்டார் முருகப்பெருமான் என வர்ணனையாளர் சொல்ல வியந்து போய் ,

அப்படியே எமது மனமுகந்த நண்பர் திரு கண்ணபிரான் அவர்கள் வலைக்குச் சென்றால் அவரோ சூர சம்ஹாரம் நடந்தது இலங்கையிலே, ஈழத்திலே என ஆதார பூர்வமாக சொல்லுவதை சிரத்தையுடன் கேட்டு விட்டு,

அருவமும் உருவமும் ஆகி, அனாதியாய் பலவாய் ஒன்றாய்
பிரம்மமாய்  நின்ற ஜோதிப் பிழம்பதோர் மேனியாக,
கருணை கூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒரு திரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய

என்று ஒரு தோத்திரப்பாடலை சரியாகத்தான் சொல்கிறேனா என்று வலை நண்பர் திரு. துரை செல்வராஜ் அவர்கள் பதிவையும் படித்துவிட்டு,

எதற்கும் இன்று முருகப்பெருமான் சன்னதிக்கே சென்று தியானிப்போம், அசரீர் மூலம் நம் மன வலி தீர்க்கும் அருள் நமக்கு நிச்சயம் கிடைக்கும் என்று நம்பி,

எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் சிந்தாமணி விநாயகர் கோவிலுக்குச் சென்றேன்.  போகும் வழியில் அவர் வலையிலே நான் கண்ட திருப்புகழை
என் அம்மா அடிக்கடி பாடும் திருப்புகழை பாடிக்கொண்டு சென்றேன் . ரோடைக் கடக்கும்போது, ஸ்பீடா வந்த ஒரு இளவட்டம், யோவ் பெரிசு, வீட்டுலே சொல்லிக்கினு வந்துட்டயா டா என்ற போது தான் இன்னமும் இவ்வுலகிலே தான் இருக்கிறோம் என்ற நினைப்பே வந்தது.

 இந்த திருப்புகழை நினைக்கும்போத அம்மாவை, நான் சொல்றது என்னோட அம்மாவை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
அம்மா உனக்கு இந்த பாட்டை டெடிகேட் .செய்யட்டுமா ?.
ஒரு வழியா கோவிலுக்குள் நுழைந்தேன்.  முருகன் சன்னதி விநாயகர் அருகிலே.

இன்று அழகிய முருகன் அலங்கார முருகனாக, ஆறு இருகரங்களுடன் ஆறுமுகத்தான் ஆக,

அடைக்கலம் என்று அவன் தாள் அடைந்தோருக்கு ஆதரவற்றவருக்கு அருள் புரிபவனாக காட்சி அளித்ததை கண்டு நெஞ்சுருக,

முருகா, என் மனதினிலே நீ இருக்கும் திருக்கோலம் அமைய அருள் புரிவாய் என வேண்டிக்கொண்டே கோவிலை சுற்றி வர,

ஆங்கே .....

ஒரு இளம் பெண்  (கண்டிப்பாக இவள் வள்ளியோ அல்லது தெய்வானை இல்லை. ஜீன்ன்ஸ் போட்டு இருக்கிறாள்.)என்னைப் பார்த்து ஏதோ தர,

ஆஹா, முருகப்பெருமான் எனக்கு இன்று கண்களுக்கும் கண்ணீர் மல்கும் என் இதயத்துக்கு மட்டுமல்ல, என் வாய்க்கும் ஏதோ ருசியாக, சுவையாக தருகிறார் போலும் என நினைத்து நான் என் கரம் நீட்ட,

கிடைத்ததோ முருகன் படம்.

ஆம். நீங்கள் பார்க்கும் படம். அதுவே தான்.

என்னே உன் கருணை என நினைத்து முருகனை மறுமுறையும் நினைவு கூர்ந்து ,

முருகா, நீ ஆட்சி செலுத்தும் என் மனமும் உன் அரசாங்கம் என்று சொல்லாமல் சொல்லி,என் மன வலி போக்க வந்த என் இதயத்திற்குள்ளே மட்டும் அன்றி என் சட்டைப்பைக்குள்ளும் புகுந்த உன் கருணையே கருணை என்று கண்ணீர் விட்டு அழாமல் அழுது,

படத்தின் மறு பக்கத்தை பார்த்? தேன்.

திடுக்கிட்டேன்.

அது என்ன ?

ஒரு விளம்பரம்.
 . 
கழுத்து வலியா ..?  மூட்டு வலியா ? என்று உடனடி சிகிச்சைக்கு அழைக்கிறது.

முருகா ...

என்ன என்று ஒரு முறையாவது கேளேன்.
என் வலி என்ன எனச் சொல்லுமுன் ....?
என் கழுத்து வலிக்கும் முதுகு வலிக்கும் வழி சொல்கிறாயே ..

இதெல்லாம் என்  வலிதான் .  இல்லை எனச் சொல்லவில்லை.

இருப்பினும் என் மன வலிக்கு மருந்தொன்று தா.

உன் காலடியில் இருக்கும் என நான் காத்திருக்கிறேன்.

வலி தீர வழி தருவாய்.

Posted by Picasa

No comments:

Post a Comment

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!