Pages

Monday, September 2, 2013

பிச்சை எடுத்தானாம் பெருமாள்

எப்ப நான் கோவிலுக்குச் சென்றாலும், குறிப்பாக விசேட நாட்களிலே  ஒரு காட்சி.

சிவனை வலம் வரும் வழியிலே நின்று இருப்பார் யாராவது ஒரு பெண்மணி அல்லது முதியவர்.  நமது கவனத்தை அவர் பக்கம் திருப்புவதில் அவர் குரல் என்றைக்குமே துணை.

பெண்மணி ஆகப்பட்டவர் தனது புடவையின் தலைப்பை முன் நிறுத்தி , சன்ன குரலில் முந்தானையை   ஒரு பாத்திரம் போல நம் முன் விரித்து சொல்லுவார்:

என் பெண்ணுக்கு  பிச்சை எடுத்து திருமணம் செய்கிறேன். மாங்கல்ய தாரணத்துக்கு, தாலிக்கு பிச்சை தாருங்கள்.

  ஒரு இரண்டு மாதங்களுக்கு முன் நின்று கொண்டு இருந்த பெண்மணி அணிந்திருந்த நகைகள் பார்த்தால் ஏதோ தங்க மாளிகை விளம்பரம் போல கூட தோன்றியது.  ஆஹா, என்ன பக்தி, என்ன பக்தி, இப்பேர்பட்டபணக்கார  பக்தர்கள், பெண்ணுக்குத் திருமணம் நிச்சயம் ஆனால், பிச்சை எடுத்து மாங்கல்யம் வாங்குகிறேன் என்று சபதம் இட்டு இருக்கிறார்களே என்று வியக்கும் படி இருந்தது. .

என்னைப்போல சில கிழவர்கள் , மிடில் ஏஜ் இன்னும் தாண்டாதவரும் கூட   தனது மேல் துண்டை விரித்து திருப்பதிக்கு வேண்டிக்கொண்டு இருக்கிறேன். பிச்சை எடுத்து  உன் சன்னதிக்கு வருகிறேன் என்று சூளுரைத்து இருக்கிறேன்.
என்று சொல்வதில் நம்மை நம்ப வைப்பதில் நிபுணராக இருக்கிறார்கள்.

அவர்கள் நீட்டி இருக்கும் புடவைத் தலைப்பிலோ அல்லது துண்டிலோ ஏற்கனவே ஒரு சில பத்து ரூபாய் நோட்டுக்கள், சில ஐந்து ரூபாய், ஒரு ரூபாய் நாணயங்கள் இருந்து,  உன் பர்ஸ் எப்போது திறக்கப்போகிறது என்று நம்மிடத்தில் கேட்பது போல் இருக்கும்.

கோவிந்தா, நாராயணா, வெங்கடேசா, திருப்பதி மலை வாசா என்று சேவித்து வரும்போது இப்படி ஒருவர் அல்லது ஒரு பெண்மணி கண்ணில் படும்போது, அவருக்கு நம்மால் இயன்றதை செய் என்று அந்த திருப்பதி பெருமாளே கட்டளை இட்டு இருக்கிறார் என்று நமக்கும் தோன்றுவது இயற்கையே.

உனக்கு ஒரு டெஸ்ட் வச்சுருக்கார் பெருமாள். பதில் சொல்லாம பத்து ரூபாய் மினிமமா போட்டு விடு என்று மனசுக்குள்ளேந்து ஏதோ ஒண்ணூ சொல்லும்.

அது என்று எதை நினைக்கிறோமோ   அதன் மேலே தான் அவ்வளவு நம்பிக்கை வைச்சு  பிச்சை கேட்பவர்களும் துணிந்து கேட்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

 இவர்கள் உண்மையிலேயே மகளுக்கு திருமணம் நிச்சயித்து தாலி வாங்கப்பொன் வாங்கத்தான் பிச்சை எடுக்கிறார்களா ? நமது பத்து ரூபாயில் தான் அவர்கள் பையனின் உபநயனம் நடக்கப்போகிறதா, அல்லது அவர்கள் திருப்பதி பயணம் துவங்கியதா ? என்று நாம் எப்பவுமே கவனித்தது கிடையாது.

செய்த தர்மத்தை தொடர்ந்து கண்காணிப்பது கூடாது. என்று எப்பவோ எழுதப்பட்டு இருக்கும் வாக்கியம்.

கொடுத்ததை கொடுத்தேன் என்று சொல்லாதே.  மறந்து போ. என்றும் நீதி உரைப்பதும் உண்மையே.

ஆயினும், இது போன்ற ஆனால், தனக்காக இல்லாமல், பொது தர்ம கார்யங்களை நடத்துகிறோம் என்று வசூலிக்கும் நபர்கள் எத்தனை பேர் வந்த தொகையை எப்படி செலவு செய்தார்கள் என்று நாம் கவனிப்பது இல்லை.

குறிப்பாக, ஆன்மீக உலகில், அந்த யாகம் செய்கிறோம், இந்த ஹோமம் செய்கிறோம், லோக க்ஷேமத்தின் பொருட்டு செய்கிறோம், ஆயிரம்  பேருக்கு அமாவாசை அன்னிக்கு அன்ன தானம் செய்கிறோம், அந்தகூகிள் லேயே கண்டு  பிடிக்கமுடியாத ஒரு ஊர் பெயர் சொல்லி, அந்த இடத்தில் இருக்கும் ஒரு  பள்ளிக்கு ஒரு கட்டிடம் கட்டுகிறோம்.,அங்கு இருக்கும்  ஏழை குழந்தைகளுக்கு எள்ளுருண்டை வாங்கித் தருகிறோம், எள்ளுருண்டை வேண்டாம் அப்படின்னு சொன்னா லாப் டாப் வாங்கித் தருகிறோம் என்று  பலர் பலவிதமாகச் சொல்லும்போதெல்லாம் எனக்குத் தோன்றும்:

அடடா.. என்ன தர்மாத்மாக்கள் இத்தனை பேர் சடன்னா நம்ம நாட்டில் தோன்றி விட்டார்கள் ?

 எல்லாரையுமே குற்றம் சொல்வதற்கில்லை. ஆனால் எல்லா நிதி  திரட்டுபவர்களும் புறங்கையில் ஒட்டிய தேனைத் தான் நக்குகிரார்களா?
இல்லை, அத்தனையுமே அல்வா செய்து அமுக்கு விடுகிறார்களா என்றெல்லாம் ஐயம் இருக்கத்தான் செய்கிறது.

பல பொது நிறுவனங்கள் என்.ஜி.ஓ. என்றுபெயர் போட்டுக்கொண்டு  நிதி திரட்டுபவை.  ்இந்த நிருவனங்களின் வருடாந்திர கணக்கில் பார்த்தால் நிர்வாக செலவுகள், நிறுவனச் செலவுகள் என்று ஒரு கணிசமான விழுக்காடு தனை அந்த நிதியில் இருந்து விழுங்கி விடுகின்றன.

நான் எந்த ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயரைச் சொல்லவும்  விரும்பவில்லை.  ஆயினும், எந்த ஒரு பொது என்.ஜி.ஓ. நிறுவனத்துக்கும்நிதி தருவதற்கு முன்பாக, அந்த நிறுவனம் அரசாங்கத்தாரால் அனுமதிக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட நிறுவனமா, அவர்களது கணக்குகளுக்கு தணிக்கை முறை இருக்கிறதா, அந்த நிறுவனத்தில் டைரக்டர் , மேலாளர்களின் ஊதியம் என்ன ? அவர்களின் வருடாந்திர டிராவலிங் அலவன்ஸ் எத்தனை, எண்டர்டைன்மெண்ட் அலவன்ஸ் எத்தனை ? அவர்கள் என்னென்ன நிருவனங்கள் இந்த என்.ஜி.ஓ.உடன் தொடர்பு இருக்கிறது, நீங்கள் கொடுக்கும் நன்கொடைக்கு வருமான வரி விலக்கு உண்டா, அதற்கான சான்றிதழ் தருவார்களா என்றெல்லாம் நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த பதிவு அதற்காக நான் போடவில்லை.என்னைப்போல வெங்காயம் கூட வாங்க முடியாதவனுக்கு வெங்கடேச பெருமாளை பார்க்க புறப்பட முடியுமா ,சொந்தக்காசில் சாத்தியமே இல்லை.

 காஸ் வாங்கவே காசு இல்லாதவன் கூட்டத்தில் என்னைப்போன்ற பல பென்சனர்கள் கூடிய விரைவில் இருக்கபோகிறோம் என்பது மட்டும் தெரிகிறது. தர்மத்துக்கும் நமக்கும் அவ்வளவு தொடர்பு இல்லை.

அது ஒரு பக்கம்.

அண்மையில் துண்டை நீட்டிய ஒருவரிடம் நான் விசாரித்தேன். எனக்கு வேண்டாத வேலை தான்.  இருந்தாலும் வேறு என்னதான் வேலை என்று நினைத்து  அவரிடம் கேட்டேன்.

பிச்சை எடுத்துத்தான் பெருமாளைப் பார்க்க போகவேண்டுமா ?

 ( மனசுக்குள்ளே நான் நினைத்துகொண்டதெல்லாம் . : எங்குமே அந்த பெருமாள் பிரசன்னமாக இருக்கிறார்.  என்று தானே எல்லா வேதமும் சொல்கிறது. மனசுக்குள்ளே பெருமாளே என்று ஆத்மார்த்தமாக பிரார்த்திக்கொண்டால் போதாதா ?)

அவர் என்னை முறைத்துப் பார்த்தார்.  அவர் பார்வையில் எனக்கு பல அர்த்தங்கள் தொனித்தன.

1.  யோவ் கசமாலம். உன்னால் முடியும்னா எதுனாச்சும் போடு. இல்லைன்னா உன் வழியை பாத்துகினு போவயா ...

2. நான் என்ன செய்யணும் அப்படின்னு உன்னைக் கேட்டுண்டு தான் செய்யணுமா ?

3. என் டயத்தை வேஸ்ட் பண்ணாதே.  உனக்கு பதில் சொல்ற நேரத்துலே கஸ்டமர் பத்து பேர் அதுக்குள்ளே காணாம போயிடுவாங்க...

இதெல்லாமே அவர் சொல்லவில்லை.  மாறாக,

பெருமாளே பிச்சைக் காரர் தானே.  அந்த பிச்சையை பார்க்க இந்த பிச்சை போறார்.  ,அதுலே தப்பு என்ன இருக்கு ? எங்க இருக்கு ?  என்றார்.

எனக்கு திடுக்கிட்டது.

என்ன பெருமாள் பிச்சை காரரா ? என்றேன்.

 ஆமாம்.என்ன  சந்தேகம்.இல்லைன்னா ஏன் அவ்வளவு பெரிய உண்டியல் ?

அப்ப, இவங்க கிட்ட வாங்கி, அந்த உண்டியல் லே  போடப்போறீக... என்றேன்.

அப்படின்னு இல்லாட்டியும் அந்த பெருமாள் பிச்சை எடுக்கத்தான் செஞ்சார்.

என்ன அது ?

வாமனாவதாரத்துலே பலிட்டே பிச்சை கேட்டார்.  கொடுக்க முடியல்லே அப்படின்னு தெரிஞ்சுண்டு தலை மேல காலை வெச்சு க்ளோஸ் பண்ணிட்டார். 

அப்பறம்....

அது மட்டுமா...   பிராமணன் மாதிரி வேசத்தை போட்டுகிண்டு, கர்ணன் முன்னாடி போய், நீ செஞ்ச புண்ணியத்தை எல்லாம் கொடு அப்படின்னு அவனோட காது வளையத்தை பிச்சை கேட்டார்.. இல்லையா...

அது... அப்படின்னு ...இழுத்தேன்....

என்ன அது, இது, எது ?   பாண்டவர்களுக்காக, எதுன்னாச்சும் அஞ்சு கிராமமாவது கொடு அப்படின்னு துர்யொதனாதிகளிட்டேயே பிச்சை கேட்டாராமே ? 

என்னை பேச விடமாட்டார் போலத் தெரிந்தது.

மனுஷ்யனாப் புறந்தவன் எதுனாச்சும் ஒரு டயத்திலே பிச்சை எடுக்கத்தான் செய்யறான்.   பல தடவைகள் தெரியாம  பிச்சை எடுக்கிறான். சில தடவை தெரிஞ்சு பிச்சை எடுக்கிறான். 

வீட்டுக்காரிக்கு ிடி ரன்ஸ்பர் வேணும், பிரமோஷன் வேணும் அப்படின்னு ஏகப்பட்ட பேரு அலையறார்களே அதெல்லாம் பிச்சை இல்லையா...? 

அப்ப உங்க இந்த பிச்சை ஜஸ்டிபைட் அப்படின்னு சொல்றீக இல்லையா..

நாட் ஒன்லி தட்.  . யூ ஆர் பீயிங் பெனெபிட்டட் (not only that..U R being benefited.)

  எனக்கு பிச்சை போடரதுனாலே உங்களுக்குத் தான் புண்யம் போய் சேருகிறது. எனக்கு லாபம்  ஒண்ணுமில்ல. 

உண்மையிலே நீங்க தான் கருமம் செய்யறீங்க. அந்த பகவத் கைங்க்கர்யத்துலே கார்யத்துலே நான் ஒரு கருவி அவ்வளவு தான் ....

என்று திடீர் என்று ஒரு ப்ரும்மாஸ்திரத்தை வீசினார்.  

நான் அப்ப வர்றேன் என்று நழுவினேன்.

அடுத்த மாசம் .  அதே நபர்.  அதே துண்டு.  ஆனால் கோவில் வேற .இப்ப மைலாபூர்  பக்கம்.

காசிக்கு போறதா இருக்கேன். பிச்சை எடுத்துண்டு உன்னை தரிசிக்க வர்றேன் அப்படின்னு காசி விஸ்வநாதர் கிட்டே வேண்டிண்டு இருக்கேன்... என்று உடஞ்சு போன டேப் ரெகார்ட் மாதிரி சொல்லிக்கொண்டு இருந்தார். 

இந்த தடவை நான் அந்தப்பக்கம் போகவில்லை.அவர் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை.

 நம்ம தான் காசிக்கு போக முடியவில்லை. விருப்பப்படுபவர்களை  காசி விஸ்வநாதர் தனியா கூப்பிடும்போது நம்ம அதுலே நடுவிலே நிக்கறது சரியா படல. 

ஒன்ஸ் பிட்டன் ட்வைஸ் ஷை.

ஆனாலும் சிதம்பரத்திடம் சொல்லணும்.

சர்வீஸ் டாக்ஸ் அதுவும் TDS லே சார்ஜ் பண்ணறதுக்கு இன்னொரு சோர்ஸ் பாக்கி இருக்கிறது


1 comment:

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!