Pages

Friday, November 22, 2013

இதுவும் காபிதான்


 மக்கள் டி.வி. லே மாலை நேரத்துலே இலக்கண  இசைக்கு இடம் தந்து அந்த கர்நாடக இசையை மக்கள் மத்தியிலே கொண்டு செல்கிறார்கள்.

இதுவும் காபி தான்.  ராகமும் காபி.


. கர்நாடக இசையில் இந்த ராகத்துக்கு பெயர் மிஸ்ர காபி .
அது என்ன மிஸ்ர என்றால் என்ன அர்த்தம்?

கலப்பு ... !!!  பாலுடன் டிகாஷன் கலந்தால் தானே காபி ?  ஒரு வேளை சிக்கிரி அதிகமாக போட்டிருக்குமோ என்னவோ ?

சுத்தமான காபி எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தேன்.

ராதா கல்யாணத்திற்கு வாருங்கள் என்று அழைத்தார்கள் ஆலங்குடி உத்சவப்ரியர்கள்.

அங்கே கலைமாமணி ஷோபனா ரமேஷ் என்னமா பாரத நாட்டியம்.ஆடுகிறார்கள் !!  பார்ப்பதற்கு இரண்டு கண்கள் போதாது.

Only +meena kavinaya Madam can confirm இது சாஸ்த்ரீய இலக்கணத்துக்கு உட்பட்டதா இல்லையா என்று...   விஸ்வரூபம் படம் பார்த்தப்புறம் தாத்தாக்கு  இப்ப எல்லாம் ஒடிசி டான்ஸ் தான் பிடிக்கும்

எதற்கும் ஒரு டிகிரி காபி குடித்துகொண்டே பார்ப்போம்  கேட்போம் என்று
அடியே...ஒரு வாய் காபி தாயேன்...என்று
ஆத்துக்காரி கிழவியை கெஞ்சினேன்.

இப்ப தானே காபி கொடுத்தேன். அதுக்குள்ளே என்ன இன்னும் ஒன்னு ?

இத பாருங்க.. இப்போதைக்கு என்றாள் பார்யாள்.

திருமதி தேனம்மை லக்ஷ்மணன் அவர்கள் வலையிலே என்னமா ஒரு தோட்டத்தை நிழற்படம் எடுத்திருக்காக..அது மாதிரி ஒரு தோட்டத்துக்கு உள்ளார  போய் சைலண்டா  உட்கார்ந்துக்கணும் . யாருகிட்டயும் பேசக்கூடாது. கண்ணை மூடிட்டு தியானம் பண்ணுங்க.  முடியுதா ? எண்ணங்கள் வர்றது ஸ்டாப் ஆவுதா ?  அப்படின்னு  கொஞ்சம் பாருங்க.
அங்கே போய் கண்ணை மூடிக்கொண்டு இந்த மூச்சு பயிற்சி சொல்றாங்க பாருங்க... அதை கொஞ்ச நேரம் ப்ராக்டீஸ் செய்யுங்களேன்.

 ( என்ன தான் இந்த ஆர்ட் ஆப லிவிங் போலாம் என்றால் அங்கே சாதாரண ஒரு பிராணாயாமம் சொல்லி கொடுக்க 1500 ரூபாய் தரச் சொல்கிறார்கள்.  ஒரு நோட்டிஸ் பார்த்தேன். பிராணனே  போய் விடும் போல் இருக்கிறது. )

அடடா..என்ன ஒரு சூப்பர் தோட்டம் ...இருந்தாலும் ஒரு வாய் காபி தாயேன்.!!
அத குடிச்சு விட்டு அந்த பிராணாயாமத்தை சுறு சுறுப்பாக செய்யறேன்.

ஹூம் ஹூம்.  இந்த கிழவி தரமாட்டாளே..

When nothing is possible, kneel down and pray to God  

என்ற பழமொழி நினைவுக்கு வந்தது.
சில சமயங்களில் நிகழ் காலம் நிம்மதி தராத போது பழைய நினைவுகளில் பசுமையைத் தேடித்தான் போக வேண்டி இருக்கிறது.
நல்ல காபி க்கு உதாரணம் ஒரு அனாலஜி அல்லது சிமிலி  சங்கீதத்திலே ஒரு பைரவி ராகம் தானே.
அத சொன்னால் இந்த கிழவி,
பைரவி யா ? யாருங்க அந்த பைரவி என்று மூஞ்சியை ஒரு சந்தேஹமா
வைத்துக்கொண்டு

என்னை பார்க்க,

இத பாரு இது தான் அந்த பைரவி என்று நான் சொன்னால் ...
நம்ப  மாட்டேன் என்கிறாளே...?

நீங்க வந்து கொஞ்சம் சமாதானம் சொல்லுங்களேன்.

சங்கீதம் தான் தெரியல்ல, கொஞ்சம் இங்கிதமாவது வேண்டாமோ..?

அது என்ன இங்கிதம் ?

தெரிஞ்சவங்க சொல்லுங்க...Friday, November 8, 2013

சூர சம்ஹாரம்.இன்று சூர சம்ஹாரம்.

 சூர சம்ஹார நேரடி தொலைக்காட்சியை ரசித்து பார்த்து தாரகாசுரன் யானை முகம் சிம்ம முகத்தோடு வந்த அந்த அசுரனின் சோதரர்களை தன் வேலினால் வதம் செய்து பின் தன் முன்னே யுத்தம் செய்ய வந்த தாரகாசுரனையும் கொல்லாது ஆட்கொண்டார் முருகப்பெருமான் என வர்ணனையாளர் சொல்ல வியந்து போய் ,

அப்படியே எமது மனமுகந்த நண்பர் திரு கண்ணபிரான் அவர்கள் வலைக்குச் சென்றால் அவரோ சூர சம்ஹாரம் நடந்தது இலங்கையிலே, ஈழத்திலே என ஆதார பூர்வமாக சொல்லுவதை சிரத்தையுடன் கேட்டு விட்டு,

அருவமும் உருவமும் ஆகி, அனாதியாய் பலவாய் ஒன்றாய்
பிரம்மமாய்  நின்ற ஜோதிப் பிழம்பதோர் மேனியாக,
கருணை கூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒரு திரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய

என்று ஒரு தோத்திரப்பாடலை சரியாகத்தான் சொல்கிறேனா என்று வலை நண்பர் திரு. துரை செல்வராஜ் அவர்கள் பதிவையும் படித்துவிட்டு,

எதற்கும் இன்று முருகப்பெருமான் சன்னதிக்கே சென்று தியானிப்போம், அசரீர் மூலம் நம் மன வலி தீர்க்கும் அருள் நமக்கு நிச்சயம் கிடைக்கும் என்று நம்பி,

எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் சிந்தாமணி விநாயகர் கோவிலுக்குச் சென்றேன்.  போகும் வழியில் அவர் வலையிலே நான் கண்ட திருப்புகழை
என் அம்மா அடிக்கடி பாடும் திருப்புகழை பாடிக்கொண்டு சென்றேன் . ரோடைக் கடக்கும்போது, ஸ்பீடா வந்த ஒரு இளவட்டம், யோவ் பெரிசு, வீட்டுலே சொல்லிக்கினு வந்துட்டயா டா என்ற போது தான் இன்னமும் இவ்வுலகிலே தான் இருக்கிறோம் என்ற நினைப்பே வந்தது.

 இந்த திருப்புகழை நினைக்கும்போத அம்மாவை, நான் சொல்றது என்னோட அம்மாவை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
அம்மா உனக்கு இந்த பாட்டை டெடிகேட் .செய்யட்டுமா ?.
ஒரு வழியா கோவிலுக்குள் நுழைந்தேன்.  முருகன் சன்னதி விநாயகர் அருகிலே.

இன்று அழகிய முருகன் அலங்கார முருகனாக, ஆறு இருகரங்களுடன் ஆறுமுகத்தான் ஆக,

அடைக்கலம் என்று அவன் தாள் அடைந்தோருக்கு ஆதரவற்றவருக்கு அருள் புரிபவனாக காட்சி அளித்ததை கண்டு நெஞ்சுருக,

முருகா, என் மனதினிலே நீ இருக்கும் திருக்கோலம் அமைய அருள் புரிவாய் என வேண்டிக்கொண்டே கோவிலை சுற்றி வர,

ஆங்கே .....

ஒரு இளம் பெண்  (கண்டிப்பாக இவள் வள்ளியோ அல்லது தெய்வானை இல்லை. ஜீன்ன்ஸ் போட்டு இருக்கிறாள்.)என்னைப் பார்த்து ஏதோ தர,

ஆஹா, முருகப்பெருமான் எனக்கு இன்று கண்களுக்கும் கண்ணீர் மல்கும் என் இதயத்துக்கு மட்டுமல்ல, என் வாய்க்கும் ஏதோ ருசியாக, சுவையாக தருகிறார் போலும் என நினைத்து நான் என் கரம் நீட்ட,

கிடைத்ததோ முருகன் படம்.

ஆம். நீங்கள் பார்க்கும் படம். அதுவே தான்.

என்னே உன் கருணை என நினைத்து முருகனை மறுமுறையும் நினைவு கூர்ந்து ,

முருகா, நீ ஆட்சி செலுத்தும் என் மனமும் உன் அரசாங்கம் என்று சொல்லாமல் சொல்லி,என் மன வலி போக்க வந்த என் இதயத்திற்குள்ளே மட்டும் அன்றி என் சட்டைப்பைக்குள்ளும் புகுந்த உன் கருணையே கருணை என்று கண்ணீர் விட்டு அழாமல் அழுது,

படத்தின் மறு பக்கத்தை பார்த்? தேன்.

திடுக்கிட்டேன்.

அது என்ன ?

ஒரு விளம்பரம்.
 . 
கழுத்து வலியா ..?  மூட்டு வலியா ? என்று உடனடி சிகிச்சைக்கு அழைக்கிறது.

முருகா ...

என்ன என்று ஒரு முறையாவது கேளேன்.
என் வலி என்ன எனச் சொல்லுமுன் ....?
என் கழுத்து வலிக்கும் முதுகு வலிக்கும் வழி சொல்கிறாயே ..

இதெல்லாம் என்  வலிதான் .  இல்லை எனச் சொல்லவில்லை.

இருப்பினும் என் மன வலிக்கு மருந்தொன்று தா.

உன் காலடியில் இருக்கும் என நான் காத்திருக்கிறேன்.

வலி தீர வழி தருவாய்.

Posted by Picasa