Pages

Sunday, January 11, 2009

புக்கர் பரிசு இந்த வருஷம் ஒன்று கொடுத்தால்....இதே போல் கலர் கலரா தினுசு தினுசா ஒரு பத்து பூ. கண்டு களிக்க செல்க:

http://thulasidhalam.blogspot.com

கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக இந்த ப்பதிவினில் புதிதாக ஏதும் எழுதவில்லை என்பதே மறந்து போன நிலையில் வடுவூர் குமார் கானடா ராகத்தை ரசித்துவிட்டுப் போன விவரம் அறிந்து மகிழ்ந்தேன். அந்தப்பாட்டு திரையில் வந்து வெகு காலமானாலும், மக்களின் மனதை விட்டுப் போகவில்லை. இனிமையென்றால் அப்படி ஒரு இனிமை அந்தப்பாட்டில்.
நிலா, நிலா எனத்துவங்கும் பாட்டு அது.

துளசி டீச்சர் பதிவு டாலியா பூக்களின் ஒரு சுந்தர வனமாகத் திகழ்கிறது. அப்பூக்களைப் பார்த்து மயங்காத ரசிகர் இல்லை. நான் என்ன செய்தேன், அவற்றில் சில , இல்லை பலவற்றை எடுத்துக் கொண்டு போய், மேடம் கவினயா திருவெம்பாவை பாட்டுடன் இணைத்து யூ ட்யூபில் வெளியிட்டேன். அதைப்பார்த்து துளசி டீச்சர் மகிழ்ந்தார். அவர் நன்றி கூறும் அழகே தனி. வார்த்தைகளை கையாள்வதில், தான் சொல்லவேண்டியதை, எளிமையாக, கோர்வையாக சொல்வதில் அவருடைய திறமைதனை வார்த்தைகளால் வர்ணிப்பது எளிதல்ல. தமிழ் வலையுலகத்திற்கு ஒரு பல்கலைக்கழகம் துவங்கினால் அவர்தான் முதல் வைஸ் சான்ஸலர் ஆவார்.

துளசிதளம் வலைப்பதிவுக்கு வருகை தந்திருந்த ( எனக்கு அறிமுகமாகாத ) ஒரு வலைப்பதிவுக்குச் சென்றேன். துளசிதளம் புஷ்பவனம். தெய்வ சுகந்தி அவர்களின் தளத்திலோ குருமா மணம். அப்படியே தூக்கி சாப்பிட்டு விடும் போல் இருக்கிறது.

இந்த வயதில் கொண்டக்கடலை, குருமா எல்லாம் வயிரு புடைக்க தின்றுவிட்டால், ஜீரணம் ஆகுமோ ஆகாதா என்றே தெரியவில்லை.

நான் பார்த்திராத வலைப்பதிவு இது. ஜன்மம் எடுத்ததே சாப்பிடத்தானே ! நல்ல சாப்பாடு சாப்பிடவேண்டும், நல்ல பாட்டு கேட்கவேண்டும், நல்ல தூக்கம் தூங்க வேண்டும். இதைத் தவிர வேறு என்ன வேண்டும் ! அப்பப்ப , காதுக்கும் நல்லது கொஞ்சம் கேட்கவேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம், நான் ஜீவா அவர்களின் வலைப்பதிவு செல்வேன். அது பதிவு அல்ல. இசைக்கடல். அதில் முழுகிவிட்டால், அடுத்த வேளை மாத்திரை சாப்பிடவேண்டும் என்பது கூட மறந்து போகிறது. சமீபத்தில் தோடி ராகத்தில் ஒரு ராகம் தானம் பல்லவி. அப்பப்பா ! என்ன சுகம் என்ன சுகம் !!

சில மாதங்களாக எல்லா வலைகளிலும் பார்ப்பது :
follow me
விசிறிகள் தாங்கள் விசிட் செய்யும் வலையில் தங்கள் ஃபோட்டோக்களைப் பதிவு செய்ய சுலபமான வழி.
ஜீவா அவர்கள் இதை " பெரியோர் தொடர்பு" என நாகரீகமாகச் சொன்னதற்கு சிறியவனான நான் கடமைப்பட்டிருக்கிறேன். இருந்தாலும் ஒன்று பாருங்கள். ஒரு வலைப்பதிவாளர் ஏறத்தாள 53 பதிவுகளை ஃபாலோ செய்கிறாராம். அதில் எனது ஒன்பது பதிவுகளில் ஒன்றாவது இருக்குமென நினைத்து மேலும் கீழும் பன்முறை பார்த்தேன். கழுத்து வலித்ததுதான் மிச்சம். ஊஹூம். எனக்கு அந்த பாக்கியம் இல்லை. ஆண்டவனுக்கு நான் விசிறியாக முடியுமே தவிர ஆண்டவன் எனக்கு விசிறியாக முடியுமோ ? எனது பைத்தியக்கார பேராசையைப் பார்த்து எனக்கே சிரிப்பாக வந்தது.

இன்னும் பத்து நாட்களில் யூ.எஸ்ஸுக்குச் செல்லவேண்டும். அங்கு போய் அந்தக்குளிரில் எப்படி நடுங்கப்போகிறேன் என்று இப்போது வருணிக்க இயலாது. பல் கிடு கிடு என்று ஆடுமேன்னு தான் பல் செட்டே போட்டுக்கொள்ளவில்லை. அங்கிருந்து எனது பெண் தொலைபேசியில் இந்த கோதுமை ரவா என்னன்னு கேட்டால், இங்கே யாருக்கும் புரியவில்லை. உனக்கு தினம் கோதுமை சாதம் வேண்டுமல்லவா , அதனால், வரும்போது கொஞ்சம் ரவா எடுத்து வந்தால் அதைக்காண்பித்து அதை இங்கே வாங்கலாம் என்றாள். கோதுமை மாவு சப்பாத்திக்கு. க்ளுடன் என்பது அல்வா பண்ணுவதற்கு.அமெரிக்க தமிழர்கள்
கோதுமை ரவா உப்புமா எப்படி செய்கிறார்கள் ? கோதுமை ரவாவுக்கு அமெரிக்காவில், குறிப்பாக கனெக்டிகட்டில், new jersey ல் என்ன பெயர் ? தெரிந்தவர்கள் எழுதலாம். ஒருவேளை ஜீவா இதைப்படித்தால் E-மைல் போடுவார்.

இப்படி யோசித்துக்கொண்டே, வலைகளை வலம் வரும்போது, ராஜீஸ் கிச்சன் என்று ஒரு ஆங்கில வலை கண்ணில் பட்டது. கூகுளில் வீட் ரவா என்று தேடினேன். அப்போது,வீட்டில் வீட் ரவாவில் பாயசம் செய்வது எப்படி என்று ஒரு கிச்சன் வலை கண்ணில் பட்டது. ரவா பாயசத்தை வர்ணித்திருப்பது ரவா பாயசம் சாப்பிட்டது போலவே இருக்கிறது. மிந்திரி, திராட்சை எல்லாம் போட்டு, அதை ஃபோட்டோ பிடித்து போட்டிருக்கிறார்கள். ஆனால் ஒன்று புரியவில்லை. எல்லாவற்றையும் வர்ணித்துவிட்டு, இது காபி ரைட் என்று சொல்லி இருக்கிறார்கள்.

இன்டலக்சுவல் காபிரைட் என்பது அமெரிக்காவில் உண்டு என்பதை நானறிவேன். ஆனால், இவர்கள் சொன்னது போல‌ நான் ரவா பாயசம் செய்து அதில் ஒன்றிரண்டு டம்ளர் குடித்தபின், நீ காபிரைட்டை இன்ஃப்ரிஞ்சு செய்துவிட்டாய் என்று கேஸ் போட்டு விடுவாரோ என்று பயமாக இருக்கிறது. ஆனால் ஒன்று, மிந்திரிக்கு பதிலாக பாதாம் பருப்பைப் போட்டுவிட்டு, இது வேற என்று சமாளித்துக் கொள்ளலாம்.

எல்லாம் வல்ல இறைவன் காப்பாற்றுவான்.

கடைசியில் துளசி டீச்சருடைய பதிலொன்று எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
அதை மறுபடியும் மறுபடியும் படித்தேன்.

அது இதுவே:

"இயற்கையை மிஞ்சுனது ஏதும் உண்டா?

உண்மையாப் பார்த்தால் இதுதான் கடவுள். நாம்தான் அவரவர் நம்பிக்கைக்குத் தகுந்தாற்போல் பேர் வச்சுருக்கோம்,சாமிக்கு."

இரண்டே வாக்கியங்களில் உலக வானிலே அமைதி நிலா பரிணமிக்க பவனி வர‌ வழி ஒன்று சொல்லியிருக்கிறார்கள்.

புக்கர் பரிசு இந்த வருஷம் ஒன்று கொடுத்தால் அதை எங்கள் துளசி டீச்சருக்குத் தரவேண்டும்.

10 comments:

 1. பூமணமும், நாமணமும் நன்றாய் மணக்கிறது தங்கள் பதிவில்!!!
  ஜெயஸ்ரீயாரின் தாளிக்கும் மணம் பார்க்கலையோ?
  http://mykitchenpitch.wordpress.com/

  ReplyDelete
 2. கோதுமை ரவா:
  //அங்கிருந்து எனது பெண் தொலைபேசியில் இந்த கோதுமை ரவா என்னன்னு கேட்டால், இங்கே யாருக்கும் புரியவில்லை.//
  அனேகமாக உங்கள் பெண், உங்களுடன் விளையாடுகிறார்! :-)
  'Cracked wheet' என எல்லா இடங்களிலுல் கிடைக்கும். இந்திய தயாரிப்பே வேண்டுமென்றால், இந்திய க்ராசரி கடைகளில் தாராளமாக கிடைக்கும்.

  மற்றும், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து 'bulgur wheet' (http://en.wikipedia.org/wiki/Bulgur) என்னும் (கிட்டதட்ட புழுங்கல் கோதுமை) கிடைக்கும். இவை பல்வேறு #1, #2, #3, #4 என இரவையின் சைஸ்களிலும் கிடைக்கும். இவற்றிலும் உப்புமா, சாலட் செய்யலாம்.

  இவற்றைத்தவிர,
  Couscous (காஸ்கஸ் - இது நம்ம கசகசா இல்லை) (http://en.wikipedia.org/wiki/Couscous),
  Quinoa (க்யூனோவா) (http://en.wikipedia.org/wiki/Quinoa)
  போன்றவற்றிலும், கோதுமை இரவா உப்புமா போலவே, உப்புமா செய்யலாம்.
  இவையெல்லாம் whole grains ஆகையால், சத்தான உணவு.

  ஆக, இப்படி, அரிசிக்கு மாற்றாக, நிறைய வைகைகள் இருக்கு!

  ReplyDelete
 3. அடக் கடவுளே!!!!!!
  புக்கர் பரிசா?......ஹா......

  இப்படி எல்லாம் புகழுக்கும் நான் கொஞ்சம்கூடப் பொருத்தமே இல்லை. என்மேல் உள்ள அன்பும் அபிமானமும் உங்களை இப்படிச் சொல்லவச்சுருச்சு.

  (புகழ்ச்சியைக் கேட்டால் வெக்கமா இருக்காதா?)

  இங்கே கொட்டிக்கிடக்கும் அழகைக் கொஞ்சம் கேமெராவில் பிடித்தேன். அதை கடவுளுக்கு நீங்க அர்ச்சிச்சதே மனசுக்கு ரொம்பவும் மகிழ்ச்சியா இருந்தது.

  அப்புறம், இந்த கோதுமை சாதம்.

  பல்கர் வீட் (bulgar wheat)ன்னு சூப்பர்மார்கெட்டில் கிடைக்குது. ஏற்கெனவே ஸ்டீம் செஞ்ச கோதுமையை ரவையா உடைச்சு வச்சுருப்பாங்க.

  இதை அரைக் கப் எடுத்து ஒரு கப் தண்ணீரில் 20 நிமிஷம் ஊறவச்சாவே
  பொலபொலன்னு வந்துரும். நாம் அவல் ஊறவைப்பதுபோல். அதை எப்படி வேணுமுன்னாலும் சாப்பிட்டுக்கலாம். காய்கறிகள் போட்டு வெஜிடபிள் புலாவ் கூட செய்யலாம். அவலுக்குச் செய்யும் உபசாரங்கள் எல்லாம் இதுக்கும் சரியா வருது:-)))

  நான் இப்படி ஊறவச்சதை எடுத்து, இன்னும் அரைக் கப் தண்ணீர் சேர்த்து மைக்ரோவேவில் அஞ்சு நிமிஷம் வச்சுக் கோதுமை சாதமாப் பண்ணிக்கறேன்.

  தங்கள் யூ எஸ் பயணம் சிறக்க இனிய வாழ்த்து(க்)கள்.

  ReplyDelete
 4. துளசி கோபால் சொல்கிறார்:
  // (புகழ்ச்சியைக் கேட்டால் வெக்கமா இருக்காதா?)//
  சரிதான். இருந்தாலும் அந்த வெட்கம்தான்
  சான்றோர் என்போருக்கு ஒரு சான்றாம்.


  சுப்பு ரத்தினம்.
  http://vazhvuneri.blogspot.com

  ReplyDelete
 5. ஜீவா சொல்கிறார்:
  //அனேகமாக உங்கள் பெண், உங்களுடன் விளையாடுகிறார்! :‍)//
  எனது பேரக்குழந்தைகளுடன் விளையாடத்தான் நான் செல்கிறேன்.
  இந்தக் குளிரில் வேறு வெளிலே எங்கு போக முடியும் !


  சுப்பு ரத்தினம்.
  http://vazhvuneri.blogspot.com

  ReplyDelete
 6. திகிழ்மலர் சொல்கிறார்:
  // இறைவனை நம்புகிறவன்
  உயிர்களை நேசிப்பான்//

  புரியவேண்டியவர்களுக்கு
  புரிவது எப்போது ? இப்
  புவி அழிந்தபின்னேயா ?


  சுப்பு ரத்தினம்.
  http://vazhvuneri.blogspot.com

  ReplyDelete
 7. Hello Mr. Subburattinam:
  I am surprised that none of your friends mentioned a product called "Cream of Wheat" that is available in all groceries in the US. Cream of Wheat is the exact equivalent of India's "gOdumai ravai". Other products in similar category that are available in the supermarkets in the US are: wheat germ (this is very nutritious and as the name implies it is the core of the wheat containing the genetic material), cracked wheat etc., Also whole wheat flour and stone-ground flour are available too.

  ReplyDelete
 8. If you are diabetic and need some advice on what to eat while visiting the US please email me at mahakavi@gmail.com. I will be happy to give you some pointers. As for bringing anything from India with respect to food articles, don't bother. Everything that you will need or want for your dietetic needs are available here, especially in New Jersey (not as much in Connecticut but you can manage there too since there are some Indian groceries there too). Edison, New Jersey is like Mambalam in Chennai or Matunga in Mumbai.

  ReplyDelete
 9. நாரதா கூறுகிறார்:
  //
  am surprised that none of your friends mentioned a product called "Cream of Wheat" that is available in all groceries//

  த்ரிலோக சஞ்சாரியான நாரதர் முதற்தடவையாக இந்த வலைப்பதிவுக்கு வந்திருக்கிறார்.
  நாரதர் அவர்களே ! உங்கள் வரவு நல்வரவு ஆகுக !
  வீணையொலி கேட்டுத்தான் இன்று விழித்தெழுந்தேன்.
  நான் தன்யனானேன். வணக்கம். நமஸ்காரம். நமஸ்தே.
  பொங்கலன்று காலையிலேயே வந்திருக்கிறீர்கள்.
  சூடான பொங்கல் சுவையான பொங்கல்
  இனிக்கும் பொங்கல் மனம் களிக்கும் பொங்கல்
  உழவர் பொங்கல் என்னைப்போல் கிழவருக்கும் பொங்கல்.
  இந்தாரும் ! இரண்டு கப் சாப்பிடுங்கள் !
  தஞ்சாவூ ர் டிகிரி காபி சுவையுங்கள்.

  ரவையைப் பற்றித் தங்கள் தகவலுக்கு நன்றி . அதன்
  சுவை எப்படி இருக்குமென
  அவையோர் பலரும் கூறியுள்ளனர்.

  ஆமாம் . உங்கள் பதிவுகளு க்கு வந்தேன்.
  இசைபற்றிய தொகுப்பு சிறப்பாக இருக்கிறது. பேர்
  ஆசைக்கு முன் தேவையென்னும் பதிவைத் துவங்க ஏன் தாமதம் ?

  கர்னாடக இசையில் உங்கள் பிடிப்பு கவனம் இருப்பின்
  மூவி ராகாஸ் பதிவு தங்களை அழைக்கிறது.
  பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் நாளை ஒலிக்க இருக்கின்றன.

  இன்னொரு முறை தங்கள் வருகைக்கு நன்றி.

  சுப்பு ரத்தினம்..
  http://movieraghas.blogspot.com
  http://vazhvuneri.blogspot.com

  ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!